×

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று மே தின நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் துரைமுருகன் கூறினார். மே 1ம்தேதியான நேற்று உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்தில் திமுக சார்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் கனிமொழி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மாவட்ட செயலாளர் சிற்றரசு மற்றும் திமுகவினர் ஏராளமானோர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து, பொதுச் செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: என்னைக்காவது கர்நாடக அரசு நாங்கள் தமிழ்நாட்டுகு்கு தண்ணீர் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்களா? இல்லை. அதிகமாக தண்ணீர் இருக்கும் போதும் அதே பாட்டு தான், குறைவாக தண்ணீர் இருக்கும் போதும் அதே பாட்டு தான்.

காவிரி மேலாண்மை வாரியம் நீரை திறந்து விடு என்று சொன்ன பிறகும் திறக்க மாட்டேன் என்று கர்நாடக அரசு சொல்கிறது. எனவே ஒன்றிய அரசு, நீதிமன்றத்தை மதிக்காமல் கர்நாடக அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. இதில், கேள்வி கேட்க வேண்டிய உச்சநீதிமன்றம் தான். எனவே உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Karnataka ,Tamil Nadu ,Minister Duraimurugan ,CHENNAI ,Minister ,Durai Murugan ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து...